தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்


"தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்: ஒரு விளக்கம்"




திராவிடக் கட்சிகளும், இந்திய தேசிய கட்சிகளும் தமிழக மக்களுக்கு எதிரானவை ஆகும். குறிப்பாக தமிழ்நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராக அவை உள்ளன. தமிழ்நாட்டின் பல பிரிவினருக்கு இடையேயும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அதற்கேற்ப சமத்துவ நிலையை உண்டாக்க வேண்டும் என்கிற சமூகநீதிக் கொள்கையை அவை ஏற்கவில்லை.
இந்த பட்டியலில் இனி தமிழ்த்தேசியம் பேசுவோரையும் சேர்க்க வேண்டிய தேவை நேரக்கூடும். ஏனெனில், அவர்களும் சாதி ரீதியான பிரிவுகளை சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக மறுக்கின்றனர்.


"தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்"


தமிழ்த் தேசியம் பேசுவோர் சிலர் - தற்போது 'வன்னியர்களுக்குள் உட்பிரிவு இருக்கிறது' என்றும், 'வன்னியர்கள் என்கிற சாதி அமைப்பை விட, தமிழர் என்கிற இன அமைப்புதான் மேலானது' என்றும் பேசுகிறார்கள். இந்த வாதங்கள் எல்லாம் காலப்போக்கில், இனவெறி கருத்தாக மாற்றம் எடுக்கக் கூடும்!
தமிழ்நாட்டில், சாதி அமைப்பு எல்லா இடத்திலும் ஒரே தன்மையானதாக இல்லை. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் நடந்த பகுதிகளில் இருந்த அளவுக்கு, ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் சாதி வேறுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், இதர சாதிகளின் அமைப்புக்கும் வன்னியர் சாதி அமைப்புக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

அந்த வகையில். தமிழ்நாட்டின் சாதி அமைப்புக்கும், வன்னியர் சமூகத்துக்கும் இடையே உள்ள சில முக்கியமான வேறுபாடுகளைக் காண்போம்.

1. "சாதித்தொழில் இல்லை"
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாதிக்கும், அந்த சாதிக்கு என்று ஒரு தொழில் இருக்கிறது. வன்னியர்கள் அப்படி அல்ல. சாதித்தொழில் என்று எதுவும் இல்லாத சாதி, வன்னியர்கள் மட்டுமே. ஒருகாலத்தில் போரே வன்னியர்களின் தொழிலாக இருந்தது. தெலுங்கு மன்னர்கள் ஆட்சிக்கு பின்னர் அந்த நிலை இல்லாமல் போய்விட்டது. வன்னியர் சாதிக்கு மட்டும் தொழில் இல்லை என்பது ஆங்கிலேயர்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2. "உட்பிரிவு இல்லை"
தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதிகள் - தமக்குள் உட்பிரிவுகளை கொண்டிருந்தன. ஆனால், வன்னியரில் உட்பிரிவு என்று எதுவும் இல்லை. படையாட்சி, கௌண்டர், நாயகர் என பல பட்டங்களாக அழைக்கப்படுகின்றனர். எல்லா வன்னியர்களுக்கு இடையேயும் திருமண உறவு உள்ளது. அகமண முறையில் இருக்கும் சமூகங்களை - உட்பிரிவாக அடையாளம் காண முடியாது. 'ஒரு மிகப்பெரிய சாதியாக இருந்தும் கூட, உட்பிரிவு ஏதுமற்ற சாதி வன்னியர்கள் மட்டுமே' என்று தமிழ்நாடு அரசின் சட்டநாதன் குழு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
3. "சாதி அடக்குமுறை குறைவு"
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாதியும் தமக்கான இழி வேலைகளை அடுத்த சாதி மீது சுமத்தின. ஆனால், வன்னியர் சாதியில் மட்டும்தான் தமது சாதியின் அனைத்து வேலைகளையும் தமது சாதிக்கு உள்ளேயே பகிர்ந்து செய்யும் இனக்குழு முறை இருந்தது. இது தமிழ்நாடு அரசின் சட்டநாதன் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாதி அடக்குமுறைக்கான தேவை இல்லை. (சாதி அடக்குமுறை என்பது எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் ஒரே மாதிரி இல்லை)
4. "மொழி கடந்த சாதி"
தமிழ்நாட்டின் எல்லா சாதிகளும் மொழி அடிப்படையில் பெரும்பாலும் ஒரு மொழி அல்லது இரண்டு மொழியை பேசும் நிலை உள்ளது. ஆனால், வன்னியர்கள் மட்டுமே - அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியை பேசும் சமுதாயமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் வசிக்கும் வன்னியர்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்தான். ஆந்திராவில் உள்ள பள்ளிகள்/அக்னிகுல சத்திரியர்கள் தெலுங்கையும், கர்நாடகத்தில் உள்ள திகளர்கள் கன்னடத்தையும் பேசுகின்றனர்.


"இனம், சாதியை விட மேலானது அல்ல"


சாதி, இனம், மதம், மொழி எல்லாம் மனிதனின் அடையாளங்கள். இது போன்ற அடையாளங்கள் இல்லாமல் உலகின் எந்த மூலையிலும் மனிதன் வாழவில்லை. அதே நேரத்தில், எந்த அடையாளம் முக்கியம் என்பது அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபடுகிறது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் முஸ்லிம் என்பதுதான் முதன்மையானது. ஆனால், ஈரானில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் முஸ்லிம் என்பது முக்கியமல்ல. முஸ்லிமுக்குள் ஷியா பிரிவுதான் முக்கியமானது ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டின் ஏற்றத்தாழ்வான சூழல், சாதி முக்கியம் என்கிற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

"சரியான தேசிய இனம் எது?"

ஒரு தேசிய இனம் உருவாகுவதற்கு "பொது மொழி, பொது புவியியல் பகுதி, பொது பொருளாதார ஒருங்கிணைப்பு, பொது மன இயல்பு" ஆகியன மிகவும் அவசியம் என்று சொல்கிறார்கள். இந்த பட்டியலின் படி பார்த்தால் - மொழி சார்ந்த தேசிய இனத்தை விட, சாதி என்கிற இனம்தான் வலிமையானது ஆகும். (அதாவது மொழியை விட சாதிக்குதான், தேசிய இனத்துக்கான "பொது மொழி, பொது புவியியல் பகுதி, பொது பொருளாதார ஒருங்கிணைப்பு, பொது மன இயல்பு" பண்புகள் அதிகம் பொருந்துகின்றன).
எனவே, தமிழ்நாட்டினை தேசமாக கணக்கில் எடுக்க விரும்பினால், அதில் வாழும் மக்களை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்த விரும்பினால் - அதற்கு, சாதியை துணைத் தேசிய இனமாக அடையாளம் காண வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் வாழும் சாதிகள் என்கிற துணை தேசிய இனங்கள் அனைத்தும் சேர்ந்து, ஒன்றாக காணப்படும் அமைப்புதான் தமிழ்த்தேசிய இனம் ஆகும்.

இதற்கு மாற்றாக - சாதிகளைக் கடந்து தமிழ்த் தேசிய இனம் அமைய வேண்டும் - என்பது பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் சிறுபான்மைக் கூட்டத்தின் இனவெறி கருத்தாக மட்டுமே இருக்கும். இதுவே உண்மை.

Comments

Popular posts from this blog

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

வீர வன்னியர்குல சத்திரியர்கள்